எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

ஓமலூர் அருகே எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-06 19:30 GMT

ஓமலூர்:-

ஓமலூர் அருகே எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எலக்ட்ரீசியன்

ஓமலூரை அடுத்த பாகல்பட்டி செங்கானூர் முத்தாண்டி வளவு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). இவருடைய மகன் ஸ்ரீதர் (26), எலக்ட்ரீசியன். இவருக்கும், பழையூர் அய்யம்பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்த விக்ரம் (26), மோகன் குமார், கார்த்திக், கட்டிட மேஸ்திரி கார்த்திக், லித்திஷ், கோகுல் ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடித்தது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி இரவு மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விக்ரம், மோகன்குமார் உள்பட 6 பேர் உருட்டு கட்டையால் ஸ்ரீதரை தாக்கி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீதர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் 2 பேர் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரம் உள்ளிட்ட 8 பேரை 3 கட்டமாக கைது செய்திருந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த ஸ்ரீதர் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இறந்த ஸ்ரீதரின் வீட்டின் முன்பு சாமியான பந்தல் போட்டு போராட்டம் நடத்தினர். குறிப்பாக இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக செங்கனூர், பழையூர், அய்யம்பெருமாம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்ய வேண்டும் என்று ஸ்ரீதரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே செங்கனூர் புது மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் பாலாஜி (26), அதே பகுதியைச் சேர்ந்த இடும்பன் என்பவரது மகன் சிவா என்கிற சிவப்பிரகாஷ் (23) ஆகிய இருவரையும் நேற்று ஓமலூர் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதரின் உடலை அவரது உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்