2 மாத குழந்தை ரூ.3½ லட்சத்துக்கு விற்பனை: பெண் டாக்டர் உள்பட 4 பேர் கைது

2 மாத ஆண் குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு விற்ற பெண் டாக்டர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-02-21 23:29 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் அருள்முருகன். இவரது மனைவி சுடர்விழி (வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருள்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடர்விழி, பெத்தாங்குப்பத்தில் வசித்து வரும் தனது அக்காள் சுதாவின் கணவர் விஸ்வநாதனிடம், தன்னிடம் ஒரு ஆண் குழந்தை உள்ளதாகவும், அதற்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி தாருங்கள் என கேட்டுள்ளார்.

இதையடுத்து விஸ்வநாதன், அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக பல்வேறு வகையில் முயற்சி செய்தார். இருப்பினும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவரால் பிறப்பு சான்றிதழ் வாங்க முடியவில்லை. மேலும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் பிறரது குழந்தையை வைத்திருந்தால் போலீசில் சிக்கிக்கொள்வாய் என கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை

இதனால் குழந்தையை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் கொடுத்து விடலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு விஸ்வநாதன், கடலூர் கலெக்டர் அலுவலகம் சென்று, அங்கிருந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை சேர்ப்பது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், விஸ்வநாதனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வடலூரில் உள்ள சுடர்விழியிடம் குழந்தை இருப்பதாக தெரிவித்தார்.

ரூ.3½ லட்சத்துக்குவாங்கிய பெண்

இதையடுத்து போலீசார் சுடர்விழியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வடலூர் கோட்டக்கரை பகுதியில் வசித்து வரும் சித்த மருத்துவர் மெகருன்னிசா (67) என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி, பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு வாங்கியதும், அதற்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் குழந்தையை வேறு யாரிடமும் விற்க முடியாது என்பதால், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க முயன்றபோது சிக்கிக்கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சித்த மருத்துவர் மெகருன்னிசாவிடம் விசாரணை நடத்தியதில், வடலூரை சேர்ந்த ஆனந்த் என்பவர், கீரப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் குழந்தையை வாங்கி, அதனை மெகருன்னிசாவிடம் கொடுத்தது தெரியவந்தது. மேலும் அதற்கு கீரப்பாளையத்தை சேர்ந்த கஜேந்திரன் மனைவி ஷீலா (37), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்த செல்லக்குட்டி மகன் ஆனந்தன் (47) ஆகியோர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4 பேர் கைது

இதையடுத்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடர்விழி, சித்த மருத்துவர் மெகருன்னிசா, ஷீலா, ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 மாத ஆண் குழந்தையை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே குழந்தையை விற்ற ஆனந்த் என்பவரை போலீசார் பிடித்து, குழந்தையின் பெற்றோர் யார்?, எதற்காக குழந்தையை விற்றனர்? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே 3 குழந்தைகளை விற்ற பெண் டாக்டர்

குழந்தையை விற்ற வழக்கில் கைதான சித்த மருத்துவர் மெகருன்னிசா தன்னிடம் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளை வளர்க்க வசதியில்லாத ஏழை, எளிய பெண்களை குறிவைத்து அவர்களிடம் அதிக பணம் தருவதாகவும், அதற்கு பதிலாக குழந்தையை தர வேண்டும் எனவும் ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். அவ்வாறு வாங்கிய குழந்தைகளை, குழந்தை இல்லாத தம்பதிகளிடம் அதிக விலைக்கு விற்றுள்ளார்.

மேலும் மெகருன்னிசா மீது அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் குழந்தை கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதேபோல் அவர் கீரப்பாளையத்தை சேர்ந்த ஷீலா, சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்த ஆனந்தன் ஆகியோருடன் சேர்ந்து இதற்கு முன்பு 3 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்