சாத்தான்குளத்தில் மாயமான 2 கல்லூரி மாணவிகள் கடத்தலா?

சாத்தான்குளத்தில் மாயமான 2 கல்லூரி மாணவிகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என பெற்றோர் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-11-29 19:31 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்தவர் அச்சுதன் (வயது 50), தொழிலாளி. இவருடைய மகள் கார்த்திகா இவர் சாத்தான்குளத்தில் உள்ள மனோ கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தட்டார்மடம் கொழுந்தட்டு கிராமத்தை சேர்ந்த ராபர்ட் செல்வன் மகள் ஹெப்சிபா செல்வகுமாரி (20). இவரும் கார்த்திகாவுடன் படித்து வருகிறார். தோழிகளான இவர்கள் 2 பேரும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

கடந்த 23-ந்தேதி கார்த்திகா, ஹெப்சிபா மற்றும் ஒரு மாணவி ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு புறப்பட்டு சென்றனர். அதன்பிறகு கார்த்திகா, ஹெப்சிபா ஆகியோர் திரும்பி வரவில்லை. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து 2 பேரின் பெற்றோரும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார்கள் அளித்தனர். அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கார்த்திகாவின் தந்தை அச்சுதன், தாய் லதா, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்தனர். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'கடந்த 23-ந்தேதி மதியம் 3 பேரும் வங்கிக்கு சென்று பணம் எடுத்து வருவதாகவும், இணையதள சேவை வசதி பெறுவதற்கு விண்ணப்பிப்பதாகவும் கூறிச்சென்றனர். ஆனால் அதன்பிறகு 2 பேர் மட்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எங்களுடைய மகளை கடத்தி சென்று விட்டார்கள் என்று கருதுகிறோம். எனவே, இதில் டி.ஐ.ஜி. தலையிட்டு அவர்களை விரைவாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

இதற்கிடையே, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நேற்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் ஆய்வு செய்ததுடன், மாணவிகள் காணாமல் போனது தொடர்பாகவும் விசாரணை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.


Tags:    

மேலும் செய்திகள்