பிறந்தநாளுக்கு பரிசு அனுப்புவதாக கூறி ரூ.2½ லட்சம் மோசடி

பிறந்தநாளுக்கு பரிசு அனுப்புவதாக கூறி ரூ.2½ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-13 18:45 GMT

சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வேறொரு செல்போன் எண்ணில் இருந்து ஹாய் என்ற குறுந்தகவல் வந்துள்ளது. அது யார் என்று அந்த பெண் கேட்டபோது அந்த நபர் அமெரிக்காவில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு இந்தியாவில் உள்ள நபரிடம் நட்பு ரீதியாக தொடர்பு கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் வாட்ஸ்-அப்பில் பேசி வந்தனர். சில நாட்கள் கழித்து, தனக்கு பிறந்தநாள் என்றும், அதற்காக சங்கரன்கோவில் பெண்ணிற்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் தொடர்பு கொண்டு சங்கரன்கோவில் பெண்ணுக்கு வந்திருக்கும் பார்சலை டெலிவரி செய்ய ரூ.35ஆயிரம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனால் சங்கரன்கோவில் பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு கடந்த 10-7-2023 அன்று ரூ.35 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். மீண்டும் அதே நாளில் வரி கட்ட வேண்டும் எனக்கூறி சங்கரன்கோவில் பெண்ணிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கேட்டுள்ளார். அந்த பணத்தையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். இதன் பிறகு மீண்டும் சங்கரன்கோவில் பெண்ணிடம் அவர் பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் பணத்தை அனுப்பவில்லை.

அதன் பிறகு அந்த பெண்ணின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. அவர் யார்? என்றும் தெரியவில்லை. அவரிடமிருந்து மீண்டும் எந்த தகவலும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் தலைமையில் போலீசார் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்