பல்லடம் படுகொலை: 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்-அமைச்சர்

பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-04 10:42 GMT

சென்னை,

திருப்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (3-9-2023) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி. க/பெ.பழனிசாமி (வயது 69), ரத்தினாம்பாள், க/பெ. சுப்பிரமணியம் (வயது 58), செந்தில்குமார், த/பெ.சண்முகம் (வயது 48) மற்றும் மோகன்ராஜ், த/பெ.பழனிசாமி (வயது 45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்