குமரியில் 2¾ லட்சம் பேர் முதல்கட்ட தடுப்பூசி போடவில்லை

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 2¾ லட்சம் பேர் இன்னும் முதற்கட்ட தடுப்பூசியே போடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

Update: 2022-06-16 17:17 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 2¾ லட்சம் பேர் இன்னும் முதற்கட்ட தடுப்பூசியே போடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மீண்டும் தொற்று பரவல்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு உத்தரவுப்படி அனைத்து விதமான நோய் தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே நோய் பரவல் சற்று அதிகரித்து வருகிறது.

அதே சமயம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால், கடந்த 14-ந் தேதி ஒரே நாளில் 26 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அனைத்து மக்களும் கட்டாயமாக 2 கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வலியுறுத்தி உள்ளார்.

2¾ லட்சம் பேர்...

ஆனால், குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 283 பேர் இன்னும் முதற்கட்ட தடுப்பூசியே செலுத்தவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது முதற்கட்ட தடுப்பூசி 12 லட்சத்து 28 ஆயிரத்து 917 பேருக்கு போடப்பட்டு உள்ளது. இது 81.32 சதவீதம் ஆகும்.

பூஸ்டர் டோஸ்

இதே போல 2-ம் கட்ட தடுப்பூசி 10 லட்சத்து 56 ஆயிரத்து 453 பேருக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. இது 69.91 சதவீதம் ஆகும். அப்படியெனில் இன்னும் 4 லட்சத்து 54 ஆயிரத்து 747 பேர் 2-ம் கட்ட தடுப்பூசி போடவில்லை. 15-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 81 ஆயிரத்து 351 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 69 ஆயிரத்து 596 பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. 12-14 வயதுக்கு உட்பட்டவர்களில் 43 ஆயிரத்து 277 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 28 ஆயிரத்து 465 பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்ன காரணங்களுக்காக தடுப்பூசி போடாமல் உள்ளனர்? என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர். முன்கள பணியாளர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போடவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்