கட்டிட காண்டிராக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

பணிகளை முடிக்காமல் கூடுதல் தொகை பெற்ற காண்டிராக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-18 19:45 GMT

கோவை

பணிகளை முடிக்காமல் கூடுதல் தொகை பெற்ற காண்டிராக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கட்டுமான பணி

கோவை கணபதி மணியக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பாலமலை ரோடு ரங்காநகர் பகுதியை சேர்ந்த கட்டுமான காண்டிராக்டர் கே.ஜெயச்சந்திரன் என்பவரை 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வர்த்தக பயன்பாட்டு கட்டிடம் கட்ட அணுகினேன். அவர், சாய்பாபாகாலனி வி.ஜி.ஆர்.புரம் பகுதியில் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு ரூ.49 லட்சம் செலவில் கட்டிட பணிகளை 100 நாட்களுக்குள் முடிக்க இருதரப்பினரும் ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்த தொகையில் 30 சதவீதத்தை முதலில் ஜெயச்சந்திரன் பெற்றார். ஒப்பந்தப்படி கட்டிட வேலை முறையாக நடைபெறவில்லை. கட்டிட பொருட்களும் தரமானதாக இல்லை. ஆனால் மேலும் 30 சதவீத தொகையை பெற்றார். மொத்தம் ரூ.28 லட்சத்து 44 ஆயிரத்து 260 பெற்றார். நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி கட்டிட பணியும் முடியவில்லை. எனவே கூடுதலாக வசூலித்த ரூ.9 லட்சத்து 38 ஆயிரத்து 674-ஐ 24 சதவீத வட்டியுடன் திரும்ப கொடுக்க உத்தரவிடுவதுடன், வாடகை வருமான இழப்புக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

ரூ.2 லட்சம் அபராதம்

வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ஆர்.தங்கவேல், உறுப்பினர் ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'பணிகளை முடிக்காமல் கூடுதலாக பெற்ற ரூ.9 லட்சத்து 38 ஆயிரத்து 674 தொகையை 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்குவதுடன், வாடகை வருவாய் இழப்பு மற்றும் சேவை குறைபாடுக்கு ரூ.2 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்