வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே மொபட்டில் வைத்திருந்த ரூ.2¼ லட்சம் பணம் திருட்டு
வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே மொபட்டில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
ரூ.2¼ லட்சம் திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட செங்கழனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது 46). இவர் நேற்று கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை மொபட் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு வண்டலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மொபட்டை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தனது மொபட் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து ராகவன் ஒட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாலுகா அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள், இதேபோல கூடுவாஞ்சேரியில் ராகவன் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் பணத்தை திருடிய மர்ம நபர்களை ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.