சாலை விதிகளை மீறியதாக 2 லட்சத்து 85 ஆயிரம் வழக்குகள் பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 2 லட்சத்து 85 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-12-31 16:51 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 2 லட்சத்து 85 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

87 சதவீத வழக்குகள் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 5,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 245 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குளில் களவு போன சொத்துக்களின் மதிப்பு ரூ.2 கோடி 22 லட்சத்து 72 ஆயிரத்து 768 ஆகும்.

அதில் மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடி 81 லட்சத்து 84 ஆயிரத்து 145 ஆகும். 87 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 82 சதவீத சொத்து மீட்கப்பட்டுள்ளது.

21 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 49 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் சிறுமிகள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

59 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 59 பேர் குண்டர் தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாகன விபத்து மரண வழக்குகள் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகன விபத்துகளை குறைக்கும் பொருட்டு சாலை விதிகளை மீறிய 2 லட்சத்து 85 ஆயிரத்து 143 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது 72 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மணல் திருட்டில் ஈடுபட்டவர்களின் மீது 136 வழக்குகள் பதிவு செய்து 139 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது மொத்தம் 186 வழக்குகள் பதிவு செய்தும், 30 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 7 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது,

கஞ்சா விற்றதாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 96 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகளின் 24 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திலேயே முன்மாதிரியாக சுமார் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள 3 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நன்றி

மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிப்பதில் காவல்துறையினர் பங்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மாவட்ட மக்களின் பங்கும் அளப்பரியது.

ஆகையால் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட பங்காற்றிய அனைத்து மக்களுக்கும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக நன்றியும் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்