பெ.பொன்னேரி சாலையில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற லாரிகள்

மணல் குவாரியில் தாமதமாக டோக்கன் வழங்கப்பட்டதால் பெ.பொன்னேரி சாலையில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2023-09-05 18:45 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே பெ.பொன்னேரி கிராமத்திற்கும் அரியலூர் மாவட்டம் சிலுப்பனுர் கிராமத்திற்கும் இடையே வெள்ளாறு செல்கிறது. இதில் சிலுப்பனூர் வெள்ளாற்றங்கரையில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு பெ.பொன்னேரி வழியாக தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று மணல் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு சென்று வருகிறது. அதன்படி நேற்று மணல் அள்ளுவதற்காக லாரிகள் பெ.பொன்னேரி வழியாக வெள்ளாற்றுக்கு சென்றது. ஆனால் அங்கு மணல் அள்ள லாரிகளுக்கு டோக்கன் தாமதமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் பெ.பொன்னேரியில் உள்ள பெண்ணாடம்-அரியலூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் காலை 8 மணிக்கு லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் 2 கிலோ மீட்டர் வரை லாரிகள் அணிவகுத்து நின்றதால் அந்த வழியாக பஸ், கார் மற்றும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். இருப்பினும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற லாரிகளால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்