பர்கூர் மலைப்பகுதியில் குடிநீருக்காக 2 கி.மீ. தூரம் நடந்து செல்லும் மலைவாழ் மக்கள்
பர்கூர் மலைப்பகுதியில் தலையில் குடங்களை சுமந்தபடி மலைவாழ் மக்கள் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று வனக்குட்டையில் தேங்கி நிற்கும் கலங்கிய நீரை குடிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
அந்தியூர்:
பர்கூர் மலைப்பகுதியில் தலையில் குடங்களை சுமந்தபடி மலைவாழ் மக்கள் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று வனக்குட்டையில் தேங்கி நிற்கும் கலங்கிய நீரை குடிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
22 குடும்பத்தினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மலைக்கிராமம் கள்வாரை மற்றும் நெல்லிக்காடு. இந்த கிராமத்தில் 22 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தங்களுக்கு குடிநீர் வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த ஆழ்குழாய் கிணறு பயனற்று அப்படியே கிடக்கிறது.
கலங்கிய நிலையில்...
அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் குடிநீருக்காக வனப்பகுதியையொட்டி 1 கிலோ தூரத்தில் உள்ள வனக்குட்டைக்கு செல்கிறார்கள். ஆபத்தான நிலையில் அதில் இறங்கி தண்ணீரை குடங்கள் மற்றும் பானைகளில் எடுத்து வருகின்றனர். 5 வயது குழந்தை முதல் முதியவர்கள் வரை அந்த வனக்குட்டையில் இருந்து தான் தண்ணீரை எடுத்து வருகிறார்கள்.
வனக்குட்டையில் குப்பை, தூசுகள் மிதப்பதுடன், தண்ணீரும் கலங்கிய நிலையில் காணப்படுகிறது.
2 கிலோ மீட்டர் தூரம்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், 'மாசு கலந்த கலங்கிய நீரைத்தான் நாங்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். இந்த குடிநீருக்காக நாங்கள் கிராமத்தில் இருந்து வனக்குட்டைக்கு சென்று வர மொத்தம் 2 கிலோ மீட்டர் தூரம் ஆகிறது.
குடிநீருக்காக அலைவதிலேயே எங்களுக்கு நேரம் சென்று விடுகிறது. இதனால் நாங்கள் சரியான நேரத்தில் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே எங்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.