கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை ஆந்திர மாநிலம், ராமாபுரத்தை சேர்ந்த ரத்தினம் (வயது 59) என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த ஆட்டோ, எளாவூர் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரி ஒன்று ஆட்டோவின் பின்னால் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கூலித்தொழிலாளிகளான கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தை சேர்ந்த தேவராஜன் (56), சின்னஓபுளாபுரத்தை சேர்ந்த தீபாகர் பாஸ் (45) ஆகிய 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் ரத்தினம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் பூமி (40) ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். மினி லாரியை ஓட்டிச்சென்ற டிரைவர் தூக்க கலக்கத்தில் முன்னால் சென்ற ஷேர் ஆட்டோ மீது வேகமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.