கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலி; தூங்கும்போது உயிரிழந்த சோகம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தூங்கும்போது 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-07-04 03:15 GMT

ஆயிரம் விளக்கு:

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள 4 மாடி அடுக்குமாடி கட்டிடத்தின் வளாகத்தில் முதல் மாடியில் தனியார் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தரையை அழகுப்படுத்தும் வேலையான தரைவிரிப்பு போட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத்(வயது 34) மற்றும் சத்தியமூர்த்தி(41) ஆகிய 2 கட்டிட தொழிலாளிகள் நேற்று முன்தினம் வந்தனர்.

இரவு பணியை முடித்துவிட்டு கட்டிட தொழிலாளிகள் இருவரும் அதே அறையில் தங்கி தூங்கிவிட்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் அறை முழுவதும் திடீரென கரும்புகை பரவி, தீ பற்றி மள மளவென எரிய தொடங்கியது. இதனால் பெருமளவு கரும்புகை கட்டிடத்தில் இருந்து வெளியேறியது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் சென்றவர்கள், உடனடியாக போலிசுக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த எழும்பூர், வேப்பேரி, மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு துறையினர், ½ மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே அறையில் தூங்கி கொண்டிருந்த 2 பேரும், தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூங்கும்போது 2 பேர் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மத்திய மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மேற்பார்வையிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. உயிரிழந்த கோபிநாத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. சத்தியமூர்த்தி கடந்த 10 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். நடந்த தீ விபத்தில் நிறுவனத்தின் பல கம்ப்யூட்டர் உபகரணங்கள், பிரிண்டர்கள் போன்ற பொருட்கள் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்