2 யானை தந்தங்கள் பறிமுதல்; 5 பேர் கைது

முதுமலையில் இருந்து கடத்தி சென்ற 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மசினகுடியை சேர்ந்த 5 பேரை கர்நாடகா வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.;

Update: 2022-12-11 18:45 GMT

கூடலூர், 

முதுமலையில் இருந்து கடத்தி சென்ற 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மசினகுடியை சேர்ந்த 5 பேரை கர்நாடகா வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

யானை தந்தங்கள்

கர்நாடகா மாநிலம் குண்டல்பெட் அருகே பசவன்பூர் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக சிலர் நடமாடுவதாகவும், மேலும் யானை தந்தங்கள் வைத்திருப்பதாகவும் பந்திப்பூர் புலிகள் காப்பக வன பாதுகாவலர் ரமேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி வன அலுவலர் நவின்குமார் தலைமையிலான வனத்துறையினர் பசவன்பூர் கிராமத்துக்கு சென்று கண்காணித்து வந்தனர்.

பின்னர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிலரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்கள் வந்த சுற்றுலா வேனை சோதனை செய்தனர். அதில் 2 யானை தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் உள்ள காட்டு யானையின் தந்தங்கள் என்பது தெரிய வந்தது.

5 பேர் கைது

இதைத்தொடர்ந்து பந்திப்பூர் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்த ரங்கசாமி (வயது 35), சஜீவகுமார் (35), என்.வினோத் (36), கதிரேசன் (45), செல்வநாயகம் (44) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து 2 யானை தந்தங்கள், அதை கடத்துவதற்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே காட்டு யானை தந்தங்கள் பிடிபட்டது தொடர்பாக சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த காட்டு யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து கடத்தி சென்று விற்க முயன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் சிலரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூடலூர், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்