கடலில் மூழ்கி கூடலூர் வாலிபர்கள் 2 பேர் பலி

மாஹிக்கு சுற்றுலா சென்ற கூடலூர் வாலிபர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

Update: 2022-10-26 18:45 GMT

கூடலூர், 

மாஹிக்கு சுற்றுலா சென்ற கூடலூர் வாலிபர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

கடலில் முழ்கினர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சிவ சண்முக நகர், காளம்புழா, செவிடிப்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 7 பேர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளா மாநிலம் கண்ணனூர் அருகே உள்ள மாஹிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். நேற்று முன்தினம் மாலையில் கூடலூர் புறப்பட தயாராகினர்.

பின்னர் கண்ணனூர் அருகே உள்ள தர்மடம் அழிமுகம் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் 2 பேர் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதைக் கண்ட சக வாலிபர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் தர்மடம் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடலில் மூழ்கிய வாலிபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

2 வாலிபர்கள் பலி

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது கூடலூர் சிவ சண்முக நகரை சேர்ந்த தம்பி என்பவரது மகன் அகில் (வயது 24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மற்றொருவரை தேடும் பணி நடைபெற்றது. மேலும் ஆழ்கடலுக்குள் சென்று தேடுவதற்காக சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற மீனவர்கள் பலர் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது. பின்னர் 3 மணி நேரத்துக்கு பிறகு இரவு 9 மணிக்கு கூடலூர் சிவ சண்முக நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுனிஷ் (25) உடலை மீனவர்கள் மீட்டனர்.

பின்னர் 2 உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தர்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் குளித்த போது 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்