அரசு ஆஸ்பத்திரியில் ஓய்வூதியம் பெற்று தர டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது

பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் ஓய்வூதியம் பெற்று தர டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-03-30 14:24 IST

ஓய்வுதியம் பெற்று தர லஞ்சம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு கிராமத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சென்னை புழல் காவாங்கரை பகுதியில் வசிக்கும் சங்கர் (வயது 61) டாக்டராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் இவர் ஓய்வூதியத்தியம் கிடைக்க பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரி மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதனை பெற்றுத் தருவதற்கு ஆஸ்பத்திரியில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வரும் பொன்னேரி கச்சேரி சாலையில் வசிக்கும் லோகேஷ்பாபு (40) என்பவர் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஓய்வு பெற்ற டாக்டர் சங்கர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

2 பேர் கைது

இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை ஆஸ்பத்திரியில் தற்காலிக பணியாளராக வேலை செய்யும் திருவள்ளூர் மாவட்டம் குன்னவாயல் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (43) என்பவரிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது இளநிலை உதவியாளர் லோகேஷ்பாபு வாங்கி வரும்படி கூறியதை அடுத்து டாக்டர் சங்கரிடம் பணம் பெற்றதாக தெரிவித்தார்.

இதைதொடர்ந்து ஆஸ்பத்திரியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் லோகேஷ்பாபு, தற்காலிக ஊழியர் ரமேஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்