வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது

தூத்துக்குடியில் வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-22 13:46 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் முகமதுஅலி. இவருடைய மகன் ரியாஸ் (வயது 21). இவர்கள் முத்தையாபுரம் மகாலெட்சுமி நகரில் வசித்து வந்தனர். ரியாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்து வந்ததால் அந்த பகுதியில் இருந்த வீட்டை காலிசெய்துவிட்டு அண்ணா நகருக்கு சென்றனர். இந்தநிலையில் ரியாஸ் தன்னுடைய நண்பர் மாரிச்செல்வத்தின் உறவினரான ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் தூத்துக்குடி முள்ளக்காட்டை அடுத்துள்ள சீல் வைக்கப்பட்ட தனியார் குடோனில் ரியாஸ் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் ரியாசின் நண்பர் மாரிச்செல்செல்வத்தின் உறவுக்கார பெண்ணுடன் தொடர்பில் இருந்ததற்காக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் தொடர்பை கைவிட்டு விடும்படி அவரது நண்பர்கள் ரியாஸிடம் பலமுறை கூறியுள்ளனர்.

ஆனால் இதை ரியாஸ் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்ததால், அவரை மது குடிக்க அழைத்து சென்று, அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி முள்ளக்காடு, ராஜீவ் நகரைச் சேர்ந்த போத்தா ரவி மகன் மாரிச்செல்வம் (23), முனியசாமி நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் கனகசபாபதி (29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்