பிளஸ்-2 தேர்வு எழுதிய 2 மாணவிகள் தற்கொலை

ராசிபுரம், பெரியமணலியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-04-11 18:45 GMT

பிளஸ்-2 மாணவி

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆர் எம் சி காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவரது மகள் பாரதி (வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு நீட் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வினோத், மகள் பாரதியை ஏன் நீட் தேர்வு பயிற்சிக்கு செல்லவில்லை என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த பாரதி, நேற்று காலையில் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாரதியின் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்கச்செய்தது.

போலீஸ் விசாரணை

இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் பாரதியின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில் சேர...

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் பெரிய மணலி பகுதியை சேர்ந்தவர் முருகன் (50). இவரது மனைவி பழனியம்மாள். தறித் தொழிலாளியான இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில் 3-வது மகள் மாலதி ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதில் 4-வது மகள் மலர்க்கொடி (17) ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதி உள்ளார்.

இந்தநிலையில் மலர்க்கொடி கல்லூரியில் சேர விருப்பப்பட்டு தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக 3-வது மகளின் படிப்பு முடிந்தவுடன் ஒரு ஆண்டிற்கு பிறகு மேல்படிப்பு படிக்க வைப்பதாக அவர் கூறியுள்ளார். இதனை ஏற்காத மலர்க்கொடி தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மலர்கொடி திரும்ப வரவில்லை. இதனையடுத்து மகளை அக்கம்பக்கத்தில் தேடினர்.

தற்கொலை

அப்போது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் மலர்க்கொடி குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மலர்க்கொடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்