2 விவசாயிகள் சாவில் திடீர் திருப்பமாக மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மருமகன் சிக்கினார்

நெகமத்தில் 2 விவசாயிகள் சாவில் திடீர் திருப்பமாக சொத்து விற்ற பணத்துக்கு ஆசைப்பட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மருமகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-06 18:03 GMT

நெகமம்

நெகமத்தில் 2 விவசாயிகள் சாவில் திடீர் திருப்பமாக சொத்து விற்ற பணத்துக்கு ஆசைப்பட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மருமகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் 2 பேர் சாவு

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). விவசாயி. இவருடைய உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (56), விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நெகமம் அடுத்துள்ள பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் சாலையில் உள்ள துளசி தோட்டத்தில் அமர்ந்து மதுகுடித்ததாக தெரிகிறது.

மதுகுடித்த சிறிது நேரத்தில் திடீரென 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மதுகுடித்த 2 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சொத்தை விற்றார்

இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மதுகுடித்ததில் பலியான மனோகரனுக்கு மாசிலாமணி (25) என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் (30) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சத்தியராஜ் பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோழித்தீவன நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். சத்தியராஜ்-மாசிலாமணி தம்பதிக்கு 1½ வயதில் மகள் உள்ளது. சத்தியராஜ் தனது மாமனாருக்கு அவ்வப்போது மது வாங்கி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை ரூ.35 லட்சத்திற்கு விற்றதும், இந்த பணத்தை வைத்து அவர் நண்பர்களுடன் மதுகுடித்து சந்தோஷமாக இருந்ததாகவும் தெரிகிறது.

மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை

இதற்கிடையில் மாமனாரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்்த சத்தியராஜ் அந்த பணத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அதற்காக தனது மாமனாரை கொலை செய்ய முடிவு செய்தார். இதன்படி சத்தியராஜ் மதுவை வாங்கி அதில் விஷம் கலந்து, தனது மாமனாரிடம் குடிக்க கொடுத்துள்ளார்.

இதனை அறியாத அவர் மதுவை வாங்கிக்கொண்டு, தனது உறவினர் வேலுச்சாமியுடன் சேர்ந்து மதுவை குடித்துள்ளார். விஷம் கலந்த மதுவை குடித்ததால் தான் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மருமகன் சிக்கினார்

இதையடுத்து விவசாயிகள் இறந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். பின்னர் அந்த பகுதியில் பதுங்கியிருந்த சத்தியராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து விற்ற பணத்துக்கு ஆசைப்பட்டு சொந்த மாமனாருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்