2 எலக்ட்ரீசியன்களுக்கு தலா 20 ஆண்டு சிறை

ஆடு மேய்க்க சென்ற 12 வயது மாணவிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த 2 எலக்ட்ரீசியன்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-08-31 18:45 GMT

ஆடு மேய்க்க சென்ற 12 வயது மாணவிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த 2 எலக்ட்ரீசியன்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

கடந்த 2011-ம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி, ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்த பின்னர் அவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் கணபதி(29), பிரபு (31). இருவரும் எலக்ட்ரீசியன்கள்.

அவர்கள் இருவரும் ஆடு மேய்க்க சென்ற மாணவிக்கு மது மற்றும் பிரியாணி வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணபதி, பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

20 ஆண்டு சிறை

2 பேர் மீதும் சிவகங்கை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் தனலட்சுமி ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் நேற்று தீர்ப்பளித்தார். கணபதி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதில் 2 வழக்குகளில் தலா 20 ஆண்டு சிறையும், ஒரு வழக்கில் 5 ஆண்டு சிறையும், மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதால், 20 ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இதேபோல் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கும் 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்கவும் நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பில் பரிந்துரைத்துள்ளார்.

---------------

Tags:    

மேலும் செய்திகள்