இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.2½ கோடி கஞ்சா பறிமுதல்

வேளாங்கண்ணி அருகே செருதூரில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.2½ கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-02 18:45 GMT

வேளாங்கண்ணி அருகே செருதூரில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.2½ கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க தனிப்படை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளாங்கண்ணி அருகே செருதூரில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கண்காணிப்பு பணி

அதன் பேரில் சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணியில் இருந்து செருதூர் வரை கடற்கரையோரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செருதூர் வெள்ளையாற்றின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு படகை எடுக்க 3 பேர் வந்தனர். அவர்களை பார்த்தும் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் அருகே சென்றனர். அதிகாரிகளை கண்டதும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இலங்கைக்கு படகில் கடத்த முயற்சி

இதனைத்தொடர்ந்து அவர்களை அதிகாரிகள் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தை சேர்ந்த அருளழகன்(வயது 23), காஞ்சிநாதன்(27), நாலுவேதபதியை சேர்ந்த வேணுகோபால்(27) ஆகிய 3 பேர் என்பதும், இவர்கள் செருதூரில் இருந்து இலங்கைக்கு ஒரு பைபர் படகில் கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது.

ரூ.2½ கோடி கஞ்சா

தொடர்ந்து அந்த பைபர் படகில் சோதனை செய்தபோது, ஐஸ்பெட்டியில் 9 மூட்டைகளில், முதல் தர கஞ்சா மூட்டைகள் 250 கிலோ மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் படகுடன் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

3 பேர் கைது

பின்னர் அருளழகன், காஞ்சிநாதன், வேணுகோபால் ஆகிய 3 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தது? என்று அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வீடு மற்றும் படகு உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்