ரூ.2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

திருவாரூரில் நடந்த குடியரசு தினவிழாவில் ரூ.2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ் வழங்கினார்.

Update: 2023-01-26 18:45 GMT

திருவாரூரில் நடந்த குடியரசு தினவிழாவில் ரூ.2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ் வழங்கினார்.

குடியரசு தினவிழா

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார். மேலும் 237 அரசு அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளையும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாயாருக்கு இலவச தையல் எந்திரத்தையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 47 பேருக்கு ரூ.49 ஆயிரத்து 500 மதிப்பில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.

இலவச தையல் எந்திரம்

மேலும் விதவை உதவி தொகைக்கான ஆணை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவி தொகைக்கான ஆணை உள்ளிட்ட உதவித்தொகைக்கான ஆணையும் மாவட்ட சமூக நலத்துறைசார்பில் 616 பேருக்கு ரூ.1 கோடியே 54 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 பேருக்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 275 மதிப்பிலான இலவச தையல் எந்திரத்தை வழங்கினார்.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 250 மதிப்பிலான இலவச தையல் எந்திரம் உள்பட மொத்தம் 705 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 9 ஆயிரத்து 915 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

பின்னர் நடந்த கலை நிகழ்ச்சியில் மன்னார்குடி பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கலை நிகழ்ச்சியில் இலைதளைகளை ஆடையாக அணிந்து பழங்குடியினர் போல் வேடம் அணிந்து நடனமாடிய பெரும்புகலூர் தொடக்கப்பள்ளி பள்ளி மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர்.

அவர்களுக்கு பரிசுகோப்பையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். இதேபோல் அடுத்தடுத்து பரிசுகளை வென்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தணா மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, சமூக பாதுகாப்புத்திட்டம் துணை கலெக்டர் லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்