மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.2 கோடிக்கு தீர்வு

தஞ்சை மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.2 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-03-11 19:00 GMT

தஞ்சை மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.2 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படியும், தஞ்சை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் வழிகாட்டுதலின் படியும் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை சமரசமாக பேசி தீர்வுகாண தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான அமர்வில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுசீலா, குற்றவியல் நீதித்துறை நடுவர் இளவரசி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு தீர்வு கண்டனர்.

ரூ.2 கோடி தீர்வுத்தொகை

இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமர்வுகளோடு, கும்பகோணம், மற்றும் பட்டுக்கோட்டை, ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகள் உள்பட மொத்தம் 170 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 45 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 7 லட்சத்து 64 ஆயிரத்து 900 தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தஞ்சை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் அமர்சிங், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கமணி, நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்