ரூ.2¼ கோடி மோசடி வழக்கில்முன்னாள் எம்.எல்.ஏ. மகன் கைது
தேனியில் ரூ.2¼ கோடி மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. மகனை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத் வி.வி.நகர் குக்கட்பள்ளி பகுதியில் வசிப்பவர் ஸ்ரீகாந்த் (வயது 37). இவர் ஐதராபாத்தில் பெயிண்டு உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கடந்த 2017-ம் ஆண்டு மதுரை வீரகனூர் மற்றும் தேனி அருகே உள்ள உப்பார்பட்டியை சேர்ந்த தனது உறவினர்கள் சிலர் தன்னிடம் நிலம் விற்பனை செய்வதாக ரூ.60 லட்சம், உப்பார்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ரூ.1 கோடியே 60 லட்சம் என ரூ.2 கோடியே 20 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார். அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூபபிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.
அதன்பேரில், வீரகனூரை சேர்ந்த ஸ்ரீகாந்தின் அண்ணன் மனைவி வித்யாஸ்ரீ, அவருடைய அக்காள் சாமுண்டீஸ்வரி, உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் (58), அவருடைய மகன் கஜய்ராமலிங்கம், வீரகனூரை சேர்ந்த ராஜஸ்ரீ, மதுரை கே.கே.நகரை சேர்ந்த கண்ணன் ஆகிய 6 பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஞானராஜனை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஞானராஜன் தேனி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுப்பிள்ளையின் மகன் ஆவார். பொன்னுப்பிள்ளை தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். பின்னர் அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.