ரூ.1 கோடியே 91 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
ரூ.1 கோடியே 91 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
திருப்பூ
திருப்பூர் மாவட்டத்தில் சாலைவசதி, பள்ளி பராமரிப்பு உள்பட 34 பணிகள் ரூ.1 கோடியே 91 லட்சத்தில் மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ.1 கோடியே 91 லட்சத்தில் பணிகள்
திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு சிறப்பு கூட்டம் நேற்றுகாலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யபாமா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவகாமி, செயலாளர் முரளிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து 34 பணிகள் ரூ.1 கோடியே 91 லட்சத்தில் மேற்கொள்வதற்கான தீர்மானம் வைக்கப்பட்டது. வார்டுகளில் பள்ளிகளுக்கு பெஞ்சு, மேஜை வாங்குதல், மேல்நிலைத்தொட்டி கட்டுதல், தார் சாலை, கான்கிரீட் சாலை அமைத்தல், ரேஷன் கடை அமைத்தல், சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. பின்னர் கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
பணி விவர பட்டியல்
கூட்டத்தில் தலைவர் சத்யபாமா பேசும்போது, 'மாவட்ட வார்டுகளில் செய்ய வேண்டிய பணி விவர பட்டியலை வார்டு கவுன்சிலர்கள் விரைந்து தெரிவிக்க வேண்டும். ஆனால் சில கவுன்சிலர்கள் உரிய நேரத்தில் பணி விவர பட்டியலை தெரிவிக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். கவுன்சிலர்கள் யாருக்கும் விடுபடாமல் பணிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் தேர்வு நடக்கிறது. தங்கள் வார்டுகளில் முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை ஏற்கனவே கவுன்சிலர்கள் தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும்.
பின்னர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து கேட்டதும் பணிகள் விவர பட்டியலை அளித்தால் பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளை தயாரித்து தீர்மானம் வைக்க வசதியாக இருக்கும். அந்தந்த ஒன்றியங்களில் பணிகளுக்கான மதிப்பீடு குறித்து தொழில்நுட்ப அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்று வைக்க வேண்டும். இனி காலதாமதம் இல்லாமல் பணிகள் பட்டியலை கவுன்சிலர்கள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
கவுன்சிலர் சாமிநாதன் பேசும்போது, 'கிராமப்புறங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா கிளீனிக் தொடங்கப்பட்டு முதியவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமத்தில் தகுந்த அறிவிப்பு இல்லாமல் ஓரிடத்தில் வந்து சிகிச்சை அளித்துவிட்டு செல்கிறார்கள். இதனால் முதியோர் பயன்பெற முடியாத நிலை உள்ளது. முதியோர் சிகிச்சை பெற உதவி செய்ய வேண்டும்' என்றார்.