மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் சாவு; மரம்-மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன
நாகை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் மரம்-மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் இறந்தன. இந்த மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் மரம்-மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் இறந்தன. இந்த மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
9 ஆயிரம் ஏக்கர்
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டு தோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
பலத்த காற்றுடன் மழை
இந்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கியது. அப்போது அவ்வப்போது கோடை மழை பெய்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் வேதாரண்யம், கோடியக்கரை கோடியக்காடு, கரியாபட்டினம், அகஸ்தியன்பள்ளி, தோப்புத்துறை, செம்போடை, புஷ்பவனம், தென்னம்புலம், நெய் விளக்கு ஆதனூர், கருப்பம்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ததது.
உப்பு உற்பத்தி பாதிப்பு
இந்த மழையால் அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி சேதம் அடைந்தன. இதன் காரணமாக உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.உப்பளங்களில் சேமித்து வைத்திருந்த உப்பு மழை நீரில் கரைந்து வீணாகி உள்ளது. உப்பு பாத்திகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.உப்பள பகுதியில் மழைநீர் தேங்கியதால் ஆயிரக்கணக்கான உப்பளதொழிலாளர்கள் வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கோடை காலத்தில் பரபரப்பாக காணப்பட்ட உப்பள பகுதி தற்போது வெறிச்சோடி கிடக்கிறது.
மரங்கள் முறிந்து விழுந்தது
இதேபோல் நாகை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு பலத்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இந்த மழைால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.திருமருகல் ஒன்றிய பகுதிகளில் இடி, மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
மின்தடை
திட்டச்சேரி பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த மழையால் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை, மின்சாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.வாய்மேடு, தலைஞாயிறு சுற்றுவட்டார பகுதிகளான தகட்டூர், தென்னடார், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம், மருதூர், மகாராஜபுரம், துளசாபுரம், தாணிக்கோட்டகம், வண்டுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை 5 மணி நேரம் கொட்டித்தீர்த்தது..
மின்னல் தாக்கி 2 மாடுகள் சாவு
தென்னடார் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் தேவதாஸ் என்பவரின் 2 பசுமாடுகள் மின்னல் தாக்கி இறந்தது. தாணிக் கோட்டகம் பகுதியில் தென்னை மரங்களும், மருதூர் பகுதியில் வாழை மரங்களும் சாய்ந்தன. ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தியை சேர்ந்த சுந்தராஜன் என்பவரின் வீட்டில் மின்னல் தாக்கி மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.இந்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலையில் வழக்கம் போல வெயில் சுட்டெரித்தது.
மழை அளவு
நாகை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:-
நாகை-42, திருப்பூண்டி, வேளாங்கண்ணி-13, தலைஞாயிறு-5, வேதாரண்யம்-62, கோடியக்காடு-59, திருக்குவளை-8.