அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பசுமாடுகள் பலி

அரியலூரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பசுமாடுகள் பலியாகின. எனவே இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-11 18:39 GMT

பசுமாடுகள் பலி

அரியலூர் கண்ணுபிள்ளை தெரு மற்றும் சடைய படையாச்சி தெருவை சேர்ந்தவர்கள் அம்சவள்ளி மற்றும் ராஜகுமாரி. இவர்கள் வளர்த்து வரும் பசுமாடுகள் நேற்று காலை வழக்கம்போல் அரியலூர் ஆர்.டி.ஓ. முகாம் அலுவலகம் பின்புறம் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன.

மாலை வெகுநேரமாகியும் மாடுகள் வராததால் அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு சென்ற இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 2 பசுமாடுகளும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதையடுத்து அவர்கள் மின்வாரியம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சாரத்தை நிறுத்தி இறந்து கிடந்த பசுமாடுகளை மீட்டனர். இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் கூறுகையில் இறந்து கிடந்த 2 பசுமாடுகளும் சினையாக இருந்தது. பசுமாடுகளை வளர்த்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அங்கு தேங்கியிருந்த சாக்கடை கழிவுநீரில் கீரிப்பிள்ளை, பாம்பு உள்ளிட்டவை இறந்து கிடந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மனித உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்