நகராட்சி அலுவலகத்தில் 2 கவுன்சிலர்கள் தர்ணா

வால்பாறையில் வளர்ச்சி பணிகளை தொடங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் 2 கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மன்ற கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-12-09 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் வளர்ச்சி பணிகளை தொடங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் 2 கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மன்ற கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்ற கூட்டம்

வால்பாறையில் நகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆணையாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும், அனைத்து வார்டு பகுதியிலும் எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது. எந்தவொரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் செல்ல முடிவதில்லை. குறிப்பாக எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், போதிய தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க முடியவில்லை. சாலை வசதிகள் சரிவர இல்லை. தீர்மானம் நிறைவேற்றிய பணிகள் கூட ஆரம்பிக்கப்படாமல் உள்ளதாக கூறி கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக கூச்சலிட்டனர்.

கவுன்சிலர்கள் தர்ணா

இதற்கிடையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 3-வது வார்டு கவுன்சிலர் வீரமணி, 17-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தெருவிளக்கு மற்றும் சாலை பணிகளை விரைந்து செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆணையாளரை கேட்டுக்கொண்டார்.

மேலும் துணைத்தலைவர் செந்தில்குமார் கூறுகையில், கடந்த ஆட்சியில் வால்பாறை நகராட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே தற்போது வரை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகிறோம். தற்போது குளறுபடிகள் சரி செய்யப்பட்டு வருகிறது. விரைவாக வளர்ச்சி பணிகளை தடையின்றி மேற்கொள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

பரபரப்பு

பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடமும், மற்ற கவுன்சிலர்களிடமும் நகராட்சி ஆணையாளர் பாலு பேசும்போது, நகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்படி அனைத்து வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள நிர்வாக அனுமதியை பெறுவதற்காக உயர் அதிகாரிகளுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குக்குள் நிர்வாக அனுமதி பெற்று ஒவ்வொரு பணிகளாக விரைவாக செய்து முடிக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து தர்ணாவை கவுன்சிலர்கள் கைவிட்டனர். எனினும் மன்ற கூட்டம் நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்