கட்டி முடிக்கப்பட்ட 2 மேம்பாலங்கள் இன்று திறப்பு

கோவையில் திருச்சி ரோடு, கவுண்டம்பாளையத்தில் கட்டி முடிக்கப் பட்ட 2 மேம்பாலங்கள் இன்று(சனிக்கிழமை) திறக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Update: 2022-06-10 17:37 GMT

கோவை, 

கோவையில் திருச்சி ரோடு, கவுண்டம்பாளையத்தில் கட்டி முடிக்கப் பட்ட 2 மேம்பாலங்கள் இன்று(சனிக்கிழமை) திறக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

வீடுகள் கட்ட பணி ஆணை

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் மானியத்துடன் தாமாக வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணிகள் செய்வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் 829 பேருக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்துடன் வீடு கட்ட பணி ஆணைகளையும், 11 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளையும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விழிப்புணர்வு

கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குறைகளை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வால் கோவை 24x7 என்ற திட்டத்தின் கீழ் 94898-72345 என்ற உதவி எண் தொடங்கி வைக்கப்பட்டது. சாலை அமைத்தல், குடிநீர் வசதி, சாக்கடை உள்ளிட்ட தங்கள் பகுதியில் உள்ள பொது பிரச்சினைகள் குறித்து இந்த எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

அதன்படி இதுவரை 8,407 புகார்கள் வரப்பட்டு உள்ளன. அதில் 4,637 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. மீதமுள்ள புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செல்போன் எண்ணின் அழைப்புகளில் இருந்து பெறப்படும் புகார்கள் 21 துறைகளை சேர்ந்த மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

மேம்பாலங்கள் இன்று திறப்பு

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. புதிதாக கடைகள் திறக்கப்படவில்லை. இடமாற்றம் தான் செய்யப்படுகிறது. இடமாற்றம் செய்யும்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட மாட்டாது.

அதுபோன்று கோவை திருச்சி ரோடு, கவுண்டம்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் நாளை (இன்று) திறக்கப்பட உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்க சில சட்டதிட்டம் உள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது. யாராவது அத்துமீறி மேம்பாலத்தை திறந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று ரேஷன் கடைகளில் சென்று புகைப்படம் வைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் வாலாங்குளத்தில் கொண்டு வர உள்ள படகு சவாரிக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 45 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். இதில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், பி.ஆர்.நடராஜன் எம்.பி., தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்