சங்கராபுரம் அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகள் கொலை:தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை
சங்கராபுரம் அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூங்கில்துறைப்பட்டு,
கணவன் 2-வது திருமணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். விவசாய தொழிலாளி. இவரது மனைவி பாரதி (வயது 28). இந்த தம்பதிக்கு சஞ்சய்(10) என்ற மகனும், மதியழகி(8) என்ற மகளும் இருந்தனர். பிறந்து 6 மாதமே ஆன முனீஸ்வரன் என்ற கைக்குழந்தையும் உள்ளது. அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சிறுவன் சஞ்சய் 6-ம் வகுப்பும், சிறுமி மதியழகி 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் தாமோதரன், தியாகதுருகத்தை சேர்ந்த அஞ்சலை(26) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கவின்ராஜ் என்ற மகன் இருக்கிறான். 2 மனைவிகளுடன் தாமோதரன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 2-வது திருமணம் செய்து கொண்டதால் தாமோதரனுக்கும், பாரதிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
குளிர்பானத்தில் விஷம் கலந்து...
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் 3 குழந்தைகளும் அனாதையாகி விடுமே என்று எண்ணினார். எனவே குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து அன்று மாலை பாரதி கடைக்கு சென்று குளிர்பானம் மற்றும் விஷம்(எலி பேஸ்ட்) வாங்கி வந்தார். பின்னர் குளிர்பானத்தில் விஷம் கலந்து சஞ்சய், மதியழகி ஆகிய 2 பேருக்கும் கொடுத்தார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாத 2 பேரும் தாய் கொடுத்ததும் மறுநொடியே அதை ஆசையோடு வாங்கி குடித்தனர். அதேசமயம் அந்த குளிர்பானத்தை கைக்குழந்தை முனீஸ்வரனுக்கு கொடுக்கவில்லை.
கண்ணீர் சிந்திய தாய்
தன் கண் முன்னே விஷம் கலந்த குளிர்பானத்தை 2 குழந்தைகளும் குடித்ததை பார்த்து கண்ணீர் சிந்தினார். பின்னர் அதே குளிர்பானத்தை பாரதியும் குடித்தார். சிறிது நேரத்திற்கு பிறகு 2 குழந்தைகளுடன், பாரதி தூங்க சென்றார்.
இதனை தொடர்ந்து மறுநாள் காலையில் சோர்வுடன் எழுந்த பாரதி, குளிர்பானத்தில் விஷம் கலந்து 2 குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்து விட்டதாக கணவர் தாமோதரனிடம் கூறினார்.
2 குழந்தைகள் சாவு
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தாமோதரன், தனது உறவினர்கள் உதவியுடன் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாரதி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சஞ்சய், மதியழகி ஆகிய 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 2 மணிக்கு மதியழகியும், காலை 5 மணிக்கு சஞ்சய்யும் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இது குறித்து மல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தஸ்தகீர் கொடுத்த புகாரின் பேரில் பாரதி மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.