2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
முத்துப்பேட்டையில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு நடந்தது. மேலும் ஒரு கோவிலில் திருட முயற்சி நடந்தது.
முனீஸ்வரர் கோவில்
முத்துப்பேட்டை வெள்ளகுளம் அருகே உள்ள முனீஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்தது. பின்னர் கோவிலை பூட்டி விட்டு நேற்று காலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கோவில் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் அங்கிருந்த கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். .
திருட முயற்சி
அதேபோல் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் துரைதோப்பு கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்ைத திருட முயன்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ரூ.3 ஆயிரம் திருட்டு
முத்துப்பேட்டையை அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ் குமார் ஆகியோர் சம்பவ நடந்த 3 கோவில்களையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.