உடும்பை வேட்டையாடி சமைக்க முயன்ற 2 சிறுவர்கள் கைது
காட்டுப்பகுதியில் உடும்பை வேட்டையாடி சமைக்க முயன்ற 2 சிறுவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்,
காட்டுப்பகுதியில் உடும்பை வேட்டையாடி சமைக்க முயன்ற 2 சிறுவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
உடும்பு வேட்டை
நெல்லை மாவட்டம் பணகுடி காட்டு பகுதியில் சிலர் உடும்பை வேட்டையாடி சமைப்பதாக குமரி மாவட்ட வனஅலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே குமரி மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது ஆரல்வாய்மொழி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் உடும்பை வேட்டையாடி வைத்திருந்த 3 பேரை பிடிக்க முயன்றனர். அதில் 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் பணகுடி பகுதியை சோ்ந்த 16 மற்றும் 18 வயது சிறுவர்கள் என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த இசைக்குமார் (வயது 21) என்பதும் தெரியவந்தது.
2 சிறுவர்கள் கைது
இதனை தொடர்ந்து சிறுவர்கள் 2 பேரையும் வனஅதிகாரிகள் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இசைக்குமாரை தேடிவருகிறார்கள். வேட்டையாடப்பட்ட உடும்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
உடும்பை வேட்டையாடி சமைக்க முயன்றதாக சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.