2 கோவில்களில் உண்டியல் பணம்- நகை திருட்டு

2 கோவில்களில் உண்டியல் பணம்- நகை திருட்டு போனது.

Update: 2022-07-25 19:23 GMT

ஜெயங்கொண்டம்:

தைலமரக்காட்டில் கிடந்த உண்டியல்கள்

அரியலூர் மாவட்டம் தெற்கு ஆயுதகளம் கிராமத்தில் கண்ணியம்மன் கோவில் உள்ளது. நேற்று கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலுக்கு உள்ளே இருந்த 2 உண்டியல்கள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கிராம முக்கியஸ்தர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அவர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கோவிலின் உண்டியல்கள் அருகில் உள்ள தைலமரக்காட்டில் கிடந்தது தெரியவந்தது.

பணம்-நகை திருட்டு

இதையடுத்து உண்டியல்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், கோவிலின் முன்பக்கம் வழியாக வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த 2 உண்டியல்களை அருகில் உள்ள தைலமரக்காட்டிற்கு தூக்கிச்சென்று, உண்டியல்களை உடைத்து உண்டியலில் இருந்த பணம், அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த இருந்த தாலி, குண்டு, காசு உள்ளிட்ட 5½ பவுன் நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

அந்த உண்டியல்களில் ரூ.40 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து உண்டியல்களில் பதிவாகியிருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தாலியும் திருட்டு

இதேபோல் வடக்கு ஆயுதகளம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று பூசாரி வந்து பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கிராம முக்கியஸ்தர்கள், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோவிலின் பின்பக்கம் வழியாக வந்து கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் கோவிலில் இருந்த 2 உண்டியல்களை அருகில் உள்ள தைல மரக்காட்டிற்கு தூக்கிச்சென்று உடைத்து, அவற்றில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த உண்டியல்களில் ரூ.70 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அம்மனின் கழுத்தில் கிடந்த தாலி உள்பட 4 பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது, தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ெஜயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்