திருப்பரங்குன்றத்தில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது

திருப்பரங்குன்றத்தில் வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-06 20:49 GMT

 திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றத்தில் வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் கொலை

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் செட்டியார் காம்பவுண்டில் வசித்து வருபவர் விருமாண்டி. இவரது மகன் மணிமாறன் (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கிரிவல பாதையில் உள்ள ஒரு கடை வாசல்முன்பு படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் மணிமாறனின் கழுத்தை அறுத்தது. வலியால் அலறி துடித்தபடி மணிமாறன் தப்பி ஓட முயன்றார். இருப்பினும் விடாமல் துரத்திய அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

இந்த கொலை குறித்து அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

2 பேர் கைது

அதில் மணிமாறனை கொலை செய்தது ெதன்பரங்குன்றம் சிலோன் காலனி அண்ணாநகரை சேர்ந்த நவீன் (30), திருப்பரங்குன்றம் பானாங்குளம் கண்மாய் தெருவை சேர்ந்த கண்ணன் (45) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கடந்த நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் கொத்தனார் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும், மணிமாறன் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்