சத்ரபதி வீரசிவாஜி சிலையை சேதப்படுத்திய 2 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே சத்ரபதி வீரசிவாஜி சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-11 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே சத்ரபதி வீரசிவாஜி சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிலை உடைப்பு

மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர் சத்ரபதி வீரசிவாஜியின் 9 அடி உயர சிலை நிறுவப்பட்டது.

கடந்த 8-ந்தேதி நள்ளிரவு ஒரு மர்ம கும்பல் சத்ரபதி வீரசிவாஜி சிலையின் தலையை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

2 பேர் கைது

இதுதொடர்பாக கோவில் தலைவர் நடராஜன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிரமாக ேதடுதல் வேட்டை நடந்தது.

இந்தநிலையில் மேல்புறம் பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களில் ஒருவர் மேல்புறம் பகுதியை சேர்ந்த எட்வின் ராஜ் (வயது 37), பிளம்பர் என்பதும், மற்றொருவர் பண்டாரவிளையை சேர்ந்த பிரதீஷ் (38), மெக்கானிக் என்பதும் தெரியவந்தது.

ேமலும், இருவரும் கடந்த 8-ந்தேதி இரவு மதுகுடித்து விட்டு போதையில் சத்ரபதி வீரசிவாஜி சிலையின் தலை பகுதியை சேதப்படுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து எட்வின்ராஜ், பிரதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

விரைவாக விசாரணை நடத்தி சிலையை சேதப்படுத்திய 2 பேரை கைது செய்து பிரச்சினைக்கு முடிவு ஏற்படுத்திய போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்