பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது

திண்டிவனம் பகுதியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-21 17:49 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் தொடர்ந்து பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக்குப்தா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தீவனூர் கூட்டுரோட்டில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அதில் வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றனர். இதில் சுதாரிததுக்கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த குருமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த குமார் மகன் வினோத்குமார் (வயது 26), கணபதி மகன் லோகநாதன் (20) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்த விஜயலட்சுமி உள்பட திண்டிவனம் பகுதியை சேர்ந்த பல பெண்களிடம் நகைகளை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்