சூலூர்
கோவையை அடுத்த சூலூர் சுற்றுவட்டார பகுதியில் குட்கா, புகையிலை, கஞ்சா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார்தீவிர ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் சூலூர்- திருச்சி ரோட்டில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், சூலூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் கோகுல் (வயது26), ராவத்தூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சேதுபதி (26) என்பதும், அவர்கள் இருவரும் விற்பனைக்காக 2 கிலோ 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.