(செய்தி சிதறல்) காவலாளியை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 2 பேர் கைது

காவலாளியை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-17 19:28 GMT

காவலாளியை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48). இவர் திருச்சி என்.எஸ்.பி.ரோட்டில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வடக்கு ஆண்டாள் தெரு பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது, திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெரு பகுதியை சேர்ந்த அபிஷேக் (19), காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (19) உள்பட 3 பேர் நாகராஜனை கத்தியால் வெட்டி காயப்படுத்தி செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மலைக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷேக், சூர்யா ஆகியோரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

பாம்பு பிடிபட்டது

*திருச்சி மாநகராட்சி 43-வது வார்டுக்கு உட்பட்டகாட்டூர் காமராஜர் நகர் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து அந்த பகுதி மக்களை மிரட்டி வந்தது. இது குறித்து அப்பகுதியினர் கவுன்சிலர் செந்தில்குமாரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து பாம்பு பிடிக்கும் தொழிலாளர்கள் மூலம் புதரில் மறைந்துஇருந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள புதர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

மூதாட்டி சாவு

* திருச்சி புத்தூர் அக்ரஹாரம் குளத்து மேடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சரோஜா (65). சம்பவத்தன்று வீட்டின் கழிவறையில் மயங்கி கிடந்த சரோஜாவை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சரோஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேர் கைது

* திருச்சி தாரநல்லூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமாணிக்கம் (35). பால்வியாபாரியான இவரது மாட்டு கொட்டகையில் உள்ள காப்பர் வயரை திருடியதாக திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த இம்ரான்கான் (19) மற்றும் 16,17 வயதுடைய சிறுவர்களை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

வாலிபருக்கு கத்திக்குத்து

*திருவெறும்பூர் அருகே உள்ள காந்தளூரை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் சிவானந்தம் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மாமியாரை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சிவானந்தம் தனது தந்தை பாலுவுடன் காந்தளூர் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, மாரிமுத்து சிவானந்தத்திடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி உள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சிவானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்