தாரமங்கலம்:-
தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 23). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள அப்பெண் தனது கணவருடன் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தார்.
தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள பேக்கரி முன் நின்ற அப்பெண்ணை பின் தொடர்ந்து யுவராஜ் வந்ததாக கருதி அவருடைய அண்ணன்கள் மோகன்ராஜ் (22), தமிழரசன் (24) ஆகியோர் சேர்ந்து யுவராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினரான விஜயகுமார் மற்றும் சிலர் யுவராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர்.