வடமாநில தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

Update: 2023-03-27 19:30 GMT

சேலத்தில் வடமாநில தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

வெளிமாநில தொழிலாளி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரைச் சேர்ந்தவர் ஜாகீர்கான் (வயது 25). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவரும், உடன் வேலை செய்யும் ஆகாசும் நேற்று இரவு ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றவே ஓட்டலில் இருந்த சிலர், ஜாகீர்கான், ஆகாஷ் ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வடமாநில தொழிலாளியை தாக்கியது தொடர்பாக மணியனூர் உத்திரப்பன் காட்டைச் சேர்ந்த மதன் (27), அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஷாஜகான் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஏழுமலை, கணேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

இந்த நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக வடமாநில தொழிலாளர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர்கள், வெள்ளி பட்டறை தொழிலாளி ஜாகீர்கான், ஓட்டலில் சாப்பிட சென்ற போது சிலரால் தாக்கப்பட்டார். எனவே ஜாகீர்கானை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்