மோட்டார் சைக்கிள் மோதி 1-ம் வகுப்பு மாணவி பலி

தரகம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி 1-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2022-12-18 19:25 GMT

1-ம் வகுப்பு மாணவி

திருச்சி மாவட்டம், வெள்ளப்பட்டி ஊராட்சி, பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அனுசியா. இந்த தம்பதிக்கு கீர்த்திகா (வயது 6) என்ற மகள் இருந்து வந்தாள். கீர்த்திகா தற்போது கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமம் குள்ளரங்கம்பட்டியில் உள்ள அனுசியாவின் தந்தை ராமசாமி வீட்டில் வளர்ந்து வந்தாள்.

மேலும் கீர்த்திகா குள்ளரங்கம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்கு மதியம் கீர்த்திகா சென்று அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடினார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக கீர்த்திகா கொசூர்-வீரப்பூர் மெயின் சாலையில் அங்கன்வாடி மையம் அருகே நின்று கொண்டிருந்தாள்.

மோட்டார் சைக்கிள் மோதல்

அப்போது கொசூரில் இருந்து வீரப்பூர் நோக்கி மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பூசாரிபட்டியை சேர்ந்த மகேஷ்வரன்( 30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கீர்த்திகா மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கீர்த்திகா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த கீர்த்திகாவை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கீர்த்திகா பரிதாபமாக இறந்தாள்.

இந்த விபத்து குறித்து ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் விபத்தை ஏற்படுத்திய மகேஷ்வரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்