ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 19-வது நாளாக போராட்டம்-3 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 19-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-10 18:45 GMT

ஊட்டி

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 19-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலை துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி மரத்துக்கு மனு கொடுத்தல், தாவரவியல் பூங்கா குட்டையில் இறங்கி போராடுதல், முதல்-அமைச்சருக்கு மனு அனுப்புதல் மற்றும் ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தொடர முடிவு

அதிகாரிகள், ஊழியர்களிடம் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கருப்புசாமி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அடங்கிய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் நேற்று 19-வது நாளாக தோட்டக்கலை துறை ஊழியர்கள் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஏன் திட்டமிட்டபடி மலர் கண்காட்சி பணிகளை நிறைவேற்ற முடியாததால் மாற்று வழிகள் குறித்து அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

3 பெண்கள் மயக்கம்

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அனிதா, ஷோபா, ஜெயா ஆகிய 3 பேர் திடீரென்று மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்