மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் 19,236 பேருக்கு ரூ.26 கோடியில் சிகிச்சை

மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் 19,236 பயனாளிகளுக்கு ரூ.26 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update:2023-10-13 00:15 IST

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுத்திடும் வகையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளை முறையாக பதிவு செய்து அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் எந்த வித தாமதமும் இன்றி சிகிச்சை வழங்கப்பட வேண்டும். வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச மருத்துவ காப்பீ்டு திட்டத்திற்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

19,236 பயனாளிகள் பயன்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 6 அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு மாதத்தில் 348-க்கும் மேற்பட்ட குழந்தை பேறு அறுவை சிகிச்சை செய்கின்றனர். எனவே அறுவை சிகிச்சைக்காக பிரத்யேக உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தர சுகாதார துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் 2021-ம் ஆண்டில் 5,301 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 900 மதிப்பீட்டிலும், 2022-ம் ஆண்டில் 7,678 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 82 ஆயிரத்து 865 மதிப்பீட்டிலும், 2023-ம் ஆண்டில் 6,257 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்து 525 மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் இதுவரை 3 ஆண்டுகளில் 19,236 பயனாளிகள் ரூ.25 கோடியே 89 லட்சத்து 290 மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்களுக்கு பரிசு

மேலும் 2 திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை, மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 3 அரசு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் உஷா, இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராமு, தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாவட்ட அலுவலர் சுவாமிநாதன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்