நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.19 லட்சம்
நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.19 லட்சம் கிடைத்தது.;
நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.19 லட்சம் கிடைத்தது.
நெல்லையப்பர் கோவில்
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
உண்டியல் காணிக்கை
இந்த நிலையில் நேற்று இந்த 21 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணிக்கான கண்காணிப்பு அதிகாரிகளாக நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்குபிரிவு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி ஆகியோர் செயல்பட்டனர்.
இதில் மொத்தம் ரூ.19 லட்சத்து 15 ஆயிரத்து 563 காணிக்கையாக கிடைத்தது. மேலும் 44.900 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களும், 24 கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் கிடைத்தன. இதுதவிர 31 வெளிநாட்டு பணத்தாள்களும் இருந்தன.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.