மழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாய்

கூடலூர் அருகே மழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-10-20 21:15 GMT

18-ம் கால்வாய்

உத்தமபாளையம், போடி ஆகிய தாலுகாவில் உள்ள பகுதிகள் நீர்ப்பாசன வசதி பெறும் வகையில் 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாயின் மொத்த நீளம் 40 ஆயிரத்து 800 மீட்டர் ஆகும்.

கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் மின்நிலையம் அருகே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு 18-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாயின் குறுக்கே 116 இடங்களில் பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கால்வாயில் கடந்த 13 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறப்பு

இந்த கால்வாயில் வரும் தண்ணீரை உத்தமபாளையம் தாலுகாவில் 10 கிராம பகுதிகளில் உள்ள 29 கண்மாய்கள், போடி தாலுகாவில் 3 கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 44 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதன் மூலம் 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தற்போது கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 123.65 அடியாக இருந்தது. இதனால் இந்த மாதம் இறுதியில் 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால்வாய் கரை சேதம்

இந்நிலையில் 18-ம் கால்வாய் தலை மதகு பகுதியான கழுதைமேடு, சரித்திரவு, பெருமாள் கோவில் புலம், மந்தை வாய்க்கால் பாலம் ஆகிய பகுதிகளில் மழையால் கால்வாயின் கரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. சில இடங்களில் செடி, கொடிகள், முட்புதர்கள் அதிகம் வளர்ந்து கால்வாயை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் 18-ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் அனைத்து பகுதிகளிலும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

எனவே கால்வாயில் சேதமடைந்த கரை பகுதிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். மேலும் ஆக்கிரமித்துள்ள செடிகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்