அரசு மாதிரி பள்ளியில் தங்கி படிக்க பிளஸ்-1 மாணவர்கள் 180 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தங்கி படிக்க பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 180 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-12-06 17:55 GMT

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தங்கி படிக்க பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 180 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

அரசு மாதிரி பள்ளி

வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது‌. இங்கு பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 72 பேர் தங்கி படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், மாணவர்களின் புரிதல் தன்மை மற்றும் செயல்பாடுகளை கவனித்தார்.

பின்னர் கடந்த மாதம் நடத்திய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பார்வையிட்டு, கணிதபாடத்தில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் எடுத்ததற்கான காரணம் மற்றும் வினாக்கள் குறித்து கணித ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்கள் கற்கும் திறனை அதிகரிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாக தயார் செய்யப்படுகிறதா என்று கலெக்டர் ஆய்வு செய்து, பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

பிளஸ்-1 மாணவர்கள் தேர்வு

ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தங்கி படிக்கும் பிளஸ்-2 மாணவர்களின் கற்கும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாரந்தோறும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பெண் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு பிளஸ்-2 வகுப்பு மட்டும் செயல்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக இந்த பள்ளியில் தங்கி படிப்பதற்காக பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 180 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கான விடுதி மற்றும் வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நிவாரண முகாம்கள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கினால் அவற்றை கண்டறிந்து உடனடியாக அப்புறப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களை நிவாரண முகாம்களாக மாற்றும்படியும், அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழையில் விவசாய பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. அது குறித்த கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், பள்ளி தலைமையாசிரியை தாராகேஸ்வரி மற்றும் கல்வி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்