விருந்து சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி-மயக்கம்

தஞ்சை அருகே வளைகாப்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-04 19:43 GMT

வல்லம்:-

தஞ்சை அருகே வளைகாப்பு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வளைகாப்பு நிகழ்ச்சி

தஞ்சை அருகே உள்ள சித்திரக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சித்திரக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு உணவு பரிமாறப்பட்டது.

இதை சாப்பிட்டு விட்டு உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டு விட்டு வந்த பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் 18 பேர் அனுமதி

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 17 பேர் பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காரணம் என்ன? அதிகாரிகள் விசாரணை

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிகாரிகள் சந்தித்து, நலம் விசாரித்தனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்