நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2022-08-30 20:30 GMT

மேட்டூர், 

கனமழை

கர்நாடகம், கேரள மாநிலங்களில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதுவும் தொடர்ந்து கனமழையாக கொட்டுவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு கடந்த ஜூன் மாதம் முதலே நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஜூலை மாதம் முதல் வாரத்தில் கர்நாடக அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிரம்பியது

அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர், தமிழக- கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதுதவிர காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருவதாலும் கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் மேட்டூர் அணை நிரம்பி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அன்று முதல் கடந்த 2 மாதங்களாக அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் ஒரு லட்சம் கனஅடியை தாண்டி வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்தது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு 2-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வினாடிக்கு 2 லட்சம் கனஅடிநீர்

இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே இன்று (புதன்கிழமை) காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்