மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 175 டெட்டனேட்டர்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 175 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக கல்குவாரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-09 18:34 GMT

திடீர் சோதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் கடந்த சில நாட்களாக திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பெரம்பலூரை அடுத்த கவுல்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் (வயது 47) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் போலீஸ் ஏட்டுகள் வெங்கடேசன், ஞானசேகர் உள்ளிட்ட சிறப்பு போலீசார் நேற்று சோதனையிட்டனர். அப்போது அவரது கடையில், கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக பயன்படுத்தும் 175 டெட்டனேட்டர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். பின்னர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

டெட்டனேட்டர்கள் பறிமுதல்

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 175 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மளிகை கடையின் உரிமையாளர் மகேந்திரன் மற்றும் அவரது மகன் கோபிநாத்திடம் (23) விசாரணை நடத்தினர்.

இதில், கோபிநாத் என்ஜினீயரிங் படித்துவிட்டு, கவுல்பாளையம் அருகே உள்ள கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் கும்பகோணத்தை அடுத்த குடவாசல் கொரடாச்சேரி சாலையை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

கைது

பாறைகளை தகர்ப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வழக்கமாக பயன்படுத்தும் டெட்டனேட்டர்கள் போக மீதமுள்ள 175 டெட்டனேட்டர்களை தங்களது மளிகை கடையில் வைத்து இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அனுமதியின்றி வெடிபொருட்களை வைத்திருந்ததாக கோபிநாத், கல்குவாரி உரிமையாளர் ஜனார்த்தனன், வெடி பொருட் கள் குடோன் உரிமையாளர் வெங்கடேசன் ஆகியோர் மீது கிராம நிர்வாக அலுவலர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்