செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் உள்பட 5 இடங்களில் ரூ.171 கோடியில் புதிய தொழிற்பேட்டைகள்
திருவண்ணாமலை, சேலம் உள்பட 5 மாவட்டங்களில் ரூ.171.24 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூ.171.24 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 5 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தண்டரையில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டிடம் ஆகியவற்றை, சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து, புதிய தொழிற்பேட்டைகளின் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.
உட்கட்டமைப்பு வசதிகள்
புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் முனைவோர் உடனடியாக தொழில் தொடங்க ஏதுவான வசதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் உருவாக்குதல், தொழில்முனைவோர் குழுமங்களுக்கு பொது வசதி மையங்கள் ஏற்படுத்துதல், தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கர் பரப்பளவில் ரூ.115.07 கோடி திட்ட மதிப்பில் 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், 4 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 192 தொழில் மனைகளுடன் பகுதி-2ல் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை- சேலம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பெரியகோளப்பாடி கிராமத்தில் 57.181 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.82 கோடி திட்ட மதிப்பில் 1,800 பேர் நேரடியாகவும், 4 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் 171 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், சேலம் தெற்கு தாலுகா, பெரிய சீரகப்பாடி கிராமத்தில் 56.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.22.22 கோடி திட்ட மதிப்பில் 1,000 பேர் நேரடியாகவும், 2 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில், 79 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் தாலுகா, ராசம்பாளையம் கிராமத்தில் 36.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.72 கோடி திட்ட மதிப்பில் 1,200 பேர் நேரடியாகவும், 2,500 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 107 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளன.
ஜவுளி பூங்காவில் வசதிகள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆலங்குடி கிராமத்தில் 36.47 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.41 கோடி திட்ட மதிப்பில் 1,200 பேர் நேரடியாகவும், 2,500 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் 105 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, தண்டரை கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் 0.56 ஏக்கரில், 5 ஆயிரத்து 700 சதுர அடி கட்டிட பரப்பில் வங்கி, உணவகம், மருந்தகம், நிர்வாக அலுவலகம் மற்றும் கூட்டரங்கம் போன்ற வசதிகளுடன் தொழில்முனைவோர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.22 கோடி செலவில் பொது வசதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் ரூ.171.24 கோடி மதிப்பில் 7 ஆயிரத்து 200 பேர் நேரடியாகவும், 15 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது வசதிக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.